கடந்த 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கின் யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, அவரின் கதை குறித்தும், அவரைப்போன்று ஏராளமான யாஸிதி இனப் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் சந்தித்த துயரம் குறித்தும் எதுவுமே அறியாதவராக இருந்தார் டிரம்ப்.
யாஸிதி என்பது ஈராக்கில் வாழும் ஒரு சிறுபான்மை சமூகம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், யாஸிதி இனம் வேட்டையாடப்பட்டது. மற்றொரு சிறுபான்மை சமூகமான குர்து மற்றும் யாஸிதி இனப் பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் ஜிகாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஓவல் அலுவலகத்தில், நாடியா முராத்தை டிரம்ப் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தனது யாஸிதி இனத்தினர் மறுபடியும் ஈராக் திரும்புவதற்கு உதவுமாறு டிரம்பை மன்றாடினார் முராத். “தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், யாஸிதி இனமக்களின் பகுதிகளை சொந்தம் கொண்டாட, ஈராக்கியர்களும், குர்துகளும் சண்டையிட்டு வருகின்றனர்.
நான் திரும்பவும் எனது நாட்டிற்கு சென்று, பாதுகாப்புடனும், அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ முடியவில்லை என்றால், அது நிச்சயம் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பிரச்சினை அல்ல” என்று குரல் உடைந்து கூறினார் முராத்.
தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துவரும் முராத், “தான் எப்போதும் அகதியாக வாழ விரும்பவில்லை. எனது அம்மா மற்றும் 6 சகோதரர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கொலை செய்துவிட்டார்கள். அவர்களின் உடல் சின்ஜார் வெகுஜன கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது” என்று மேலும் கூறினார் முராத்.
நாடியா முராத்தின் வேண்டுகோளை கேட்டுக்கொண்ட அமெரிக்க அதிபர், தான் இந்த விஷயம் குறித்து தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக கூறினார்.