வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோம்னேவை கடுமையாகத் திட்டி உள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகக் களமிறக்கப்பட்டு உள்ளார். ஜோ பைடனின் மகன் மீது உக்ரைன் நாட்டில் எழுந்த புகார் குறித்து அந்நாட்டு அதிபரும், சீனாவும் விசாரணை நடத்த வேண்டுமென சில நாட்களுக்கு முன் அதிபர் டிரம்ப் பகிரங்கமாகக் கூறியது சர்ச்சையானது.

இதையொட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்துக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில், குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மிட் ரோம்னே அதிபர் டிரம்ப்பை விமர்சித்தார்.   இதனால் டிரம்ப் ஆத்திரம் அடைந்துள்ளார்.

டிரம்ப் நேற்று தனது டிவிட்டரில், ‘நாடாளுமன்ற உறுப்பினர் மிட் ஒரு ஆடம்பர கழுதை. அவர் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் மோதல் போக்கைக் கொண்டிருப்பவர்.   உத்தா பகுதி மக்கள் கடந்த 2018 தேர்தலில் அவருக்கு  வாக்களித்ததை மிகப்பெரிய தவறாக உணர்வதாகக் கேள்விப்பட்டேன். அவர் கையாலாகாத ஜனநாயக கட்சி ஆட்டுவிக்கும் ஒரு முட்டாள்,’ எனப் பதிந்துள்ளார்.