வாஷிங்டன்:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர்,  அதிபர் மாளிகையின் மாடியில் இருந்து தனது ஆதரவாளர்களைப் பார்த்து சல்யூட் அடித்தார்.

அமெரிக்காவில் அதிபர்  தேர்தலுக்கான பிரசாரம் உச்சமடைந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,  மேரிலண்ட் மாகாணம், பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி டிரம்ப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த மருத்துவமனைக்கு வெளியே டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் முகாமிட்டு, டிரம்ப் தம்பதி விரைவில்  குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வந்தனர். சுமார் 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  முன்னதாக, கொரோனா குறித்து,  தான் கற்றுக் கொண்டதாக ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட டிரம்ப், காரில் வெளியே வந்தார். கண்ணாடிகள் மூடப்பட்டிருந்த அந்த காரில், முகக் கவசம் அணிந்து காட்சியளித்த டிரம்ப், சாலையில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தார். குறுகிய தொலைவு பயணத்துக்குப் பின் அவர் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார். அந்த காரில் அதிபரின் மெய்க்காவலர்கள் இருவர் முகக் கவசம் அணிந்து அமர்ந்திருந்தனர். அதிபரின் இந்தத் திடீர் பயணத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக டிவிட் பதிவிட்ட டிரம்ப்,  மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த அனைத்து ஆதரவாளர்களையும் நான் பாராட்டுகிறேன். அவர்கள் நமது நாட்டை நேசிக்கிறார்கள். அவர்களது உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கும் மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார்.

பின்னர், அவேர் காணொளி  வழியாக துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ, முப்படைத் தளபதி மார்க் மில்லி ஆகியோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை திரும்பினார்.

வெள்ளைமாளிகையின் மேல் தளத்திற்கு சென்ற டிரம்ப் தனது முகக்கவசத்தை கழற்றி ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சல்யூட் செய்தார். அவரது நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளானது. டிரம்ப் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால், டிரம்ப் முகக்கவசம் இன்றி வெள்ளை மாளிகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.