வாஷிங்டன்

டிக் டாக் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பைட்டான்ஸ் ஆகியோருடன் அமெரிக்கர்கள் எவ்வித வர்த்தகமும் செய்ய அதிபர் டிரம்ப் 45 நாட்களுக்கு தடை விதித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் டிக் டாக், யுசி  பிரவுசர் உள்ளிட்ட 59 சீன மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டன.   இந்த செயலிகள்  இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தானவை என இந்தியா அறிவித்திருந்தது.  இதையொட்டி அமெரிக்காவிலும் இந்த செயலிகளைத் தடை செய்ய மக்கள் கோரிக்கை விடுத்தனர்

இதையொட்டி சீன நிர்வாகத்திடம் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் முழுமையாக டிக் டாக் செயலியை வாங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் கூறியதாகச் செய்திகள் வெளியாகின.   இந்நிலையில் டிக் டாக் செயலியை மைக்ரோசாஃப்ட் வாங்க முன் வந்தது.

அப்போது டிரம்ப் இந்த ஒப்பந்தம் வெற்றி அடைந்தால் டிக் டாக் செயலியை வாங்கும் நிறுவனம் அமெரிக்காவுக்கு பரிமாற்ற தொகையில் பங்கு அளிக்க வேண்டும் எனக் கூறியதாகத் தகவல்கள் தெரிவித்தன.  இதை மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவரிடம் டிரம்ப் தொலைபேசியில்  கூறி உள்ளார்.

இந்நிலையில் இன்று டிர்ம்ப் ஒரு அரசு ஆணையை வெளியிட்டுள்ளார்.  அந்த ஆணையின்படி அமெரிக்கர்கள் யாரும் டிக் டாக் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பைட்டான்ஸ் ஆகியோருடன் எவ்வித வர்த்தகமும் செய்ய 45 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.