டெல் அவிவ்:
ஜெருசலேமில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்கப்படும் என்று இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டார். டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். இத்றகு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உள்பட 128 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும் இந்த தீர்மானத்தை ஏற்கமுடியாது என அமெரிக்காவும், இஸ்ரேலும் அறிவித்தன.
டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு புதிய சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மேற்கு சுவர் மற்றும் பழமை நகருக்கு இடையே 3 கி.மீ.ருக்கு சுரங்க ரெயில் பாதை அமைக்கப்படும். இதில் 2 ரெயில் நிலையங்கள் இடம் பெறும்.
பழமை நகரில் அமைக்கப்படும் ரெயில் நிலையத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் சூட்டப்படும். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.