வாஷிங்டன்: மோடியின் அரசு இரண்டாம்முறையாக பதவியேற்றுள்ள தருணத்தில், இந்தியாவுக்கான ஜிஎஸ்பி எனப்படும் வணிகச் சலுகையை ரத்து செய்துள்ளது அமெரிக்கா.
இந்த சலுகை என்பது, வளரும் நாடுகள் தங்களுடைய பொருட்களை வரிகள் எதுவும் செலுத்தாமல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாகும்.
இந்த சலுகையை இந்தியாவுடன் முறித்துக்கொள்ள, மார்ச் மாத துவக்கத்திலேயே, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க காங்கிரசுக்கு தகவல் தெரிவித்துவிட்டது.
ஏனெனில், இத்தகைய ஒரு சலுகையை ரத்துசெய்ய வேண்டுமானால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தகவல் தெரிவித்து 60 நாட்கள் வரை காத்திருக்க வேண்டுமென்ற விதிமுறை உள்ளது.
இதனையடுத்து, இந்த காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்துள்ளதால், இந்தியாவுடனான ஜிஎஸ்பி சலுகையை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கிடையே வணிகத்தில் நிலவும் தடைகள் அகல வேண்டுமென்ற நோக்கத்திலேயே இந்த சலுகை அறிமுகம் செய்யப்பட்டது என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.