டில்லி:

2வது முறையாப பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நேற்று இரவு பதவி ஏற்றுள்ள நிலையில், இன்று புதிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றியதை தொடர்ந்து மீண்டும் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று இரவு பதவி ஏற்றது.

2வது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆலோசனை, அறிவுரை வழங்கப் படும் என்று தெரிகிறது. மேலும் மற்றும் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.