வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு பணியில் மெத்தனம், மற்றும் சோம்பேறியாக பணியாற்றி வந்த சுமார் 10ஆயிரம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. திறமையற்றவர்களால் அரசு மற்றும் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதால், அவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போதும், ஊடகங்களிலும் அமெரிக்க அரசு ஊழியர்கள் குறித்து டிரம்பம் விமர்சனம் செய்திருந்தார். அமெரிக்காவில் உள்ள அரசு துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில் பெரும்பாலானோர் செயல்திறனற்றவர்கள் என்றும், தமக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும், அவர்களை கண்டறிந்து நீக்குவேன் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபராக ஜனவரியில் பதவி ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். செலவினங்களை குறைக்கும் வகையிலும், அரசின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும், புதிதாக, (DOGE ) என்னும் அரசு செயல்திறன் மேம்பாட்டு துறையை உருவாக்கினார். இந்த துறையின் தலைவராக , உலகின் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
இந்த குழு அமெரிக்க அதிபரின் உத்தரவின்பேரில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதற்கிடையில், செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில், தாமாக முன் வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனையடுத்து,சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்ய முன்வந்தனர். இது மொத்த அரசு பணிகளில் 3 சதவீதமாகும்.
,,இதை ஆய்வு செய்த எலன்மஸ்க் குழு திறமையற்ற, மெத்தனமாக பணிபுரியும் மற்றும் சோம்பேறித்தனமான ஊழியர்களை கண்டறிந்து முதல்கட்டமாக 10ஆயிரம் அரசு ஊழியர்களை ப ணி நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக, உள்துறை,எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகளில் தான் பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், எரிசக்தி துறையில் 2000 பேர் வரை பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். அமெரிக்க உள் துறையில் தான் அதிக அளவில் பணிநீக்கங்கள் நடந்துள்ளன. சுமார் 2300 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தில் 325 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் கோப்புக்களை ஒப்படைத்து விட்டு, அலுவ லகங்களைக் காலி செய்ய வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஊழியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக எந்தவொரு முன்னறிப்பும் வழங்கப்படவில்லை, உரிய நடைமுறையும் இல்லை, தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று அமெரிக்க அரசு ஊழியர் கூட்டமைப்பு டிரம்ப் நிர்வாகம் மீது குற்றம் சாட்டி உள்ளது.
அமெரிக்காவின் 36 ட்ரில்லியன் டாலர் கடன் மற்றும் கடந்த ஆண்டு ஏற்பட்ட 1.8 ட்ரில்லியன் பண பற்றாக்குறையைச் சமாளிக்க இந்த நடவடிக்கை தேவையானது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.