ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதித்தனர்.

இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் விரைவான மற்றும் பெரிய மாற்றத்தைக் குறிக்கும் பேச்சுவார்த்தைகள் என்று கூறப்படுகிறது.

மூன்றாண்டுகளுக்கு முன் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய துருப்புக்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது நிலப்பகுதியை உக்ரைன் ரஷ்யாவிடம் இழந்து வரும் நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்யா – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் பங்கேற்கவில்லை என்றால் இந்த பேச்சுவார்த்தைகளின் எந்த முடிவையும் தனது நாடு ஏற்றுக்கொள்ளாது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

அதேவேளையில், ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் விவகாரத்தில் ஓரங்கட்டப்படுவதாக கவலை தெரிவித்துள்ளன.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு கடந்த சில ஆண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கும் நிலவி வந்த விரோத போக்கை நீக்கி இருநாட்டு உறவை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும், உயர் அதிகாரிகளுடனான இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து புடின் மற்றும் டிரம்ப் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.