ஐதராபாத்
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய அரசியல் சட்டப்படி யாரும் இரு நாடுகளில் குடியுரிமை பெற முடியாது. மேலும் இந்திய குடியுரிமை பெறாதவர்கள் தேர்தலில் போட்டியிடவோ வாக்களிக்கவோ தகுதி அற்றவர்கள் ஆவார்கள். இந்த விதிமுறையால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமனேனி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இவர் வேமுலவாடா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் ஒரு ஜெர்மன் நாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருப்பதால் அவர் இந்தியக் குடிமகன் இல்லை எனப் புகார் எழுந்தது. இதையொட்டி அப்போதைய ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் தேர்வை ரத்து செய்தது. அதன்பிறகு ரமேஷ் உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்றார்.
இந்த உத்தரவு அமலில் உள்ள போது அவர் 2014 மற்றும் 2018 ஆம்,ஆண்டுகளில் நடந்த இரு சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஒரு இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அத்துடன் அவர் தனது குடியுரிமை குறித்து சட்டப்போர் நிகழ்த்தி வந்தார். சென்ற வருடம் மத்திய உள்துறை அமைச்சகம் இவருடைய இந்தியக் குடியுரிமையை ரத்து செய்தது. இதை எதிர்த்து ரமேஷ் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரமேஷிடம் ஜெமன் பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை உள்ளதா என உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையில் ரமேஷ் ஜெர்மன் பாஸ்போர்ட் வைத்துள்ளதாகவும் அதனால் அவர் ஜெர்மன் குடிமகிஅன் எனவும் உதவி சொலிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.