டெல்லி: டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராடும் வழியை மாற்றுங்கள் என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஒருமித்த தீர்வுகாணும் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா?  என்பது குறித்து பதில் அளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில  விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 22 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில், விவசாயிகள் போராட்டத்தால், டெல்லியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், கொரோனா பரவலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  போராட்டத்தில் பங்கேற்காத விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் கண்டனம் தெரித்தது. மேலும், விவசாய அமைப்புகள், அதிகாரிகள் கொண்டு குழு அமைத்து தீர்வு காணவேண்டும் என அறிவுறுத்தியது. மேலும்,  கொரோனா காலக்கட்டத்தில் ஒரே இடத்தில் விவசாயிகள் கூடியது பற்றி மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், விவசாயிகளின்  போராட்டத்தால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் விலைவாசி அதிகரித்து வருகிறது.  மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது என கூறினார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் குறிப்பிட்ட சில சட்டத்திற்கு எதிராக போராடும் உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. ஆனால்,  போராட்டங்கள் ஒரு தனி நபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது என கருத்து தெரிவித்தனர். மேலும்,  போராட்டங்களுக்கு தீர்வு காணும்வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியுமா?  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பினர். அதற்கு,  மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு குறித்து, கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “நாங்களும் இந்தியர்கள்தான், விவசாயிகளின் அவலநிலையை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்,  அதற்காக அனுதாபப்படுகிறோம். ஆனால்,  நீங்கள் (விவசாயிகள்) எதிர்ப்பு தெரிவிக்கும்  வழியை மட்டுமே மாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார். உங்கள் பிரச்சினை குறித்து  நீங்கள் வாதிடுவதை நாங்கள் உறுதி செய்வோம், அதனால்தான்,  இதை முடிவுக்கு கொண்டு வர ஒரு குழுவை அமைப்பது குறித்து நாங்கள் சிந்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள் போராட்டத்தால் டெல்லி முடங்கியது போல வாதங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல என்றதுடன்,  அதற்காக, வருடக்கணக்கில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கை தொடர்ந்து,  விடுமுறைகால அமர்வு விசாரிக்கும் என்றும்  கூறினார்.