சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள டிஆர்பி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் TET,TRB தேர்வுகளும் நடத்தப்படாமல் உள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட டிஆர்பி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுக்கான ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து டிஆர்பி தேர்வுகள் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், டிஆர்பி தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வானது End To End Encrypted என்ற முறையில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், TET, பாலிடெக்னிக் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் போன்ற தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.