அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் கோயில்களில் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிடுவதற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிகழ்வு பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று திரிபுரா. இந்த மாநிலம் கடந்த 1949ம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைந்தது. அதற்குமுன் அதை அம்மாநிலத்தை 184 அரசர்கள் ஆண்டுவந்தனர். திரிபுரா மகாராணி காஞ்சன் பிரபா இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பேரில், திரிபுரா இந்தியாவுடன் இணைந்தது.
அந்த இணைப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற அம்சங்களுள் முக்கியமானது திரிபுராவின் வழிபாட்டு தலங்களில் ஆடு, கோழிகள் பலியிடுவது தொடரும் என்றும், அரசு அதன்பொருட்டு நிதியுதவி அளிக்கும் என்பதுதான். இதனடிப்படையில் தற்போதுவரை அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் திடீரென மூக்கை நுழைத்த சுபாஷ் பட்டர்ஜி என்பவர், கோயில்களில் அரசின் நிதியுதவியுடன் ஆடு, கோழிகள் பலியிடப்படுவது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது என்றும், எனவே இதற்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பலியிடலுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் இணைப்பு ஒப்பந்தம் மீறப்படுவதாக பலரும் கொந்தளித்தள்ளனர்.
முக்கியமாக, மாநில அரசே இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.