சென்னை:
திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணி பெண், பெண் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தாம்பிகை. ஆந்திர மாநிலம் திருப்பதியில் வக்கீலுக்கு படித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நிறைமாத கர்பிணியாக இருக்கும் முத்தாம்பிகைக்கு வரும் 24ந்தேதிக்குள் குழந்தை பிறக்கும் என்று திருப்பதியில் பரிசோதனையின் போது டாக்டர்கள் கூறினர்.
தமிழகத்தில் 2வதும் பெண் குழந்தை பிறந்தால் அரசு உதவி கிடைக்கும் என்பதால், முத்தாம்பிகை 2-வது பிரசவத்தை தமிழ்நாட்டில் பார்க்க எண்ணி சென்னை திருவல்லிக்கேணி அரசு மகளிர் மகப்பேறு மருத்துவ மனையில் பிரசவ சிகிச்சைக்காக வார்டில் சேர்ந்தார்.
முதல் குழந்தை, முத்தாம்பிகை கணவர் தமிழரசுடன் வார்டுக்கு வெளியே இருந்தது. குழந்தை அம்மாவை நினைத்து அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்தும்படி தமிழரசுவிடம் பெண் போலீசார் கூறினார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கணவர் தமிழரசுவின் சத்தத்தை கேட்டு முத்தாம்பிகை வெளியே வந்தார். கணவருக்கு ஆதரவாக பெண் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் போலீஸ் முத்தாம்பிகை கன்னத்தில் அறைந்தார். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட் முத்தாம்பிகை மருத்துவமனையை விட்டு வெளியேறி சொந்தத ஊருக்கு தனது கணவருடன் பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சில் போய்க்கொண்டு இருக்கும்போது மூகாம்பிகைக்கு வலி ஏற்பட்டு பனிக்குடமம் உடைந்தது. இதனால் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ் உடனே நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்தாம்பிக்கைக்கு 2-வதாகவும் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.
முத்தாம்பிகை தாக்கப்பட்டது குறித்து திருவல்லிக்கேணி உதவி கமிசனர் விசாரணை மேற்கொண்டார். கர்ப்பிணியை தாக்கிய பெண் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.