ராமேஸ்வரம்:
லங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ராஜபக்சே ஆட்சியில் நடந்தது போலவே தற்போதைய இலங்கை அரசும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்துகொண்டே இருக்கிறது.  அதேபோல் கடந்த காங்கிரஸ் ஆட்சியை போலவே தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சியும் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.  இதனால் இலங்கை அரசு  மீனவர்கள் பிரச்சினையில் கண் மூடித்தனமாக நடந்துகொள்கிறது.  கடந்த 10 நாட்களில் மட்டும் 57 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.. இவர்களை விடுவிப்பது தொடர்பாக மீனவர் சங்க தலைவர் மகத்துவம் தலைமையில் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

விசை  படகு மீனவர்கள் ஸ்டிரைக்
விசை படகு மீனவர்கள் ஸ்டிரைக்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு உள்ள 57 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கு அரசு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை உடனே நிறைவேற்றக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அதன்படி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.