டில்லி

முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கொண்டு வராது என “தி ப்ரிண்ட்” என்னும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

“இஸ்லாமிய வழக்கப்படி ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் என கூற வேண்டும்.  அதனால் பல கணவர்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்த் செய்து விடுவதாக இஸ்லாமியப் பெண்கள் புகார் அளித்தனர்.  உச்ச நீதிமன்றம் இதைத் தடுக்க மத்திய அரசுதான் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்தது.  அதைத் தொடர்ந்து முத்தலாக் தடை சட்ட முன் வடிவு இயற்றப்பட்டது.   இதில் அவ்வாறு செய்வோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என இருந்தது.

தற்போது இந்த சட்ட முன் வடிவு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  இந்த சட்டத்துக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.   இதுவரை உத்திரப் பிரதேச அரசு மட்டுமே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்த பின் அதை இஸ்லாமிய சட்டத்தின் வாரியத்துடன் கலந்தாலோசித்து சட்டத்தின் இறுதி வடிவம் அமைக்கப்படும் என அரசு கூறி உள்ளது.

தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அளிக்கப்படும் என முன்பு மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.   ஆனால் தற்போதைய நிலையில் அரசு இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அளிக்காது என தெரிய வந்துள்ளது.  ஏற்கனவே ராஜிவ் காந்தி ஆட்சி புரிந்த 1984ஆம் வருடத்தில் நடந்த ஷா பானு வழக்கை நினைவு கூர வேண்டும்.   அந்த வழக்கில் ஷா பானு என்னும் அந்த இஸ்லாமியப் பெண் தன்னை விவாகரத்து செய்த கணவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரியதை உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து தீர்ப்பு அளித்தது.  ஆனால் அதன் பிறகு அந்தக் கணவர் இஸ்லாமிய சட்டப்படி இத்தத் காலம் என்னும் மூன்று மாதங்களுக்கு மட்டும் ஜீவனாம்சம் அளித்தால் போதுமானது என மேல் முறையீடு செய்தார்.

அனேகமாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டாலும் இஸ்லாமிய சட்டப்படி யாரேனும் அதை எதிர்க்கலாம் என்னும் நோக்கத்துடன் மோடி அரசு மிகவும் கவனத்துடன் இந்த விவகாரத்தை அணுகுகிறது.   பல மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக வின் ஆதரவு கட்சிகள் ஆட்சி புரிவதால் மத்திய அரசுக்கு விரைவில் மாநிலங்களின் சம்மதம் கிடைத்து விடும்.   ஆனால் இஸ்லாமிய சட்ட வல்லுனர்களின் கருத்தைப் பொறுத்தே இந்த சட்டத்துக்கு இறுதி வடிவம் அமைக்கப்படும்.  எனவே இந்தச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வராது.”

இவ்வாறு அந்த செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.