புதுடெல்லி: முத்தலாக் சட்டம் என்பது மதம் சார்ந்த ஒன்றல்ல, அது முற்றிலும் பெண்களின் கண்ணியம் மற்றும் மேம்பாடு சார்ந்தது என்று கூறியுள்ளார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “இந்த சட்டம் மக்களவையில் இருமுறை நிறைவேற்றப்பட்டது. ஆனால், புகாரளித்தல், பெயில் வழங்குவதற்கான நடைமுறைகள் மற்றும் ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ராஜ்யசபாவுக்கு ஆனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் காலதாமதம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் முத்தலாக் தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சிரமங்கள் ஏற்படுகின்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகும்கூட, பல வழக்குகளில் முஸ்லீம் பெண்களுக்கு முறையான நியாயம் கிடைப்பதில்லை. அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? காவல் நிலையத்தில் சென்று புகாரளித்தால், காவலர் தனக்கு அதிகாரமில்லை என்பார். நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை ஒரு பெண் தனது வீட்டில் ஆணி அடித்து மாட்டி வைத்துக்கொள்ளவா முடியும்?

இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாரும் முஸ்லீம் பெண்களின் நலம் குறித்து ஏன் யோசிப்பதில்லை? அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்து ஏன் கவலைப்படுவதில்லை. ஒரு பெண்மணி தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு எதற்காக பாரபட்சமாக உள்ளது? இந்த விஷயம் கடந்த 3 ஆண்டுகளாகவே சமூகத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, சமூகத்தளத்திற்கு ஒரு விஷயம் வந்துவிட்டப் பிறகு அதை அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இந்தியாவில் பெண்கள் எவ்வளவோ விஷயங்களில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம் பெண்கள் மட்டும் எதற்காக இந்த விஷயத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட வேண்டும்? யாரும் இந்த சட்டத்தை உண்மையாகவே எதிர்க்கவில்லை. அதை வைத்து அரசியல் செய்வதுதான் பலரின் நோக்கமாகவும் இருக்கிறது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பெண்களின் கண்ணியத்தை மதிக்கும் ஒரு தலைவர். அவர்கள் ஒரு தனிக்கட்சி. நாங்கள் அவர்களிடமும் தெளிவாகப் பேசி இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை உண்டாக்குவோம். நாங்கள் இதுதொடர்பாக ஒரு வெளிப்படையான மற்றும் விரிவான கலந்துரையாடலுக்கு தயாராகவே உள்ளோம்.

இந்த சட்டத்தில் சில தேவையற்ற திருத்தங்களைப் பரிந்துரைத்து, இதை முற்றிலும் ஒரு வலிமையற்ற சட்டமாக ஆக்க வேண்டுமென்பது சிலரின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், அத்தகைய ஒரு சட்டத்தால் யாருக்கு என்ன நன்மை? இந்த சட்டம் எந்தவகையிலும் மதம் சார்ந்ததல்ல? இது சமூகம் சார்ந்த ஒன்று.

காங்கிரஸ் இந்த நாட்டை 55 ஆண்டுகளாக ஆண்டுள்ளது. ஆனாலும், ஷா பனோ வழக்கு முதல் ஷயரா பனோ வழக்கு வரை, எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டாலும், காங்கிரஸ் தனது நிலைமையை வாக்குவங்கி அரசியலுக்காக மாற்றிக்கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.