சென்னை: தமிழக புதிய டிஜிபியாக அறிவிக்கப்பட்டுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், இன்று காலை 11.30 மணி அளவில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பதவி ஏற்கிறார். இவர் தமிழகத்தின் 30 வது டிஜிபியாக என்ற பெருமையை பெறுகிறார்.
தமிழ்நாடு காவல்துறையின் டிஜிபியாக உள்ள திரிபாதி இன்றுடன் ஓய்வுபெறுவதைத்தொடர்ந்து, புதிய டிஜிபியாக (தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக) முனைவர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உணவு, உடற்பயிற்சி என தினமும் புத்துணர்ச்சியோடு வலம் வரும் சைலேந்திர பாபு, இணைய உலகில் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தையே வைத்திருக்கிறார்.
கடந்த வாரம் டெல்லியில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குநராக சைலேந்திர பாபுவை தேர்வு செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சைலேந்திரபாபு புதிய டிஜிபியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து அவர் இன்று காலை 11.30 மணி அளவில் டிஜிபி அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கி சிறப்பு அதிரடிப்படைத் தலைவர், காவல்துறை ஆணையாளர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர், கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி எனப் பல பதவிகளை அலங்கரித்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் 30 வது டி.ஜி.பியாக பதவியேற்கிறார்.