சென்னை

ல தனியார்ப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் கூறி உள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பல தனியார்ப் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.   இதற்கு முக்கிய காரணம் கொரோனா பரவல் ஊரடங்கால் பல பெற்றோர்கள் ஊதியம் இழந்துள்ளது  என கூறப்படுகிறது.   இதையொட்டி தமிழக அரசு அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்க பல அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், ”தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாகத் தனியார்ப் பள்ளி மாணவர்கள், சிபிஎஸ்சி மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். இவ்வாறு பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ளத் தாக்கம் வரவேற்புக்குரியது.

தனியார் பள்ளிகளின் மீதிருந்த மோகம் படிப்படியாகக் குறைந்து அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. இந்த தாக்கத்தின் எதிரொலியாகப் பல தனியார்ப் பள்ளிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளது. அரசின் அதிரடி நடவடிக்கையாக அரசுப் பள்ளிகளில் சேர, எட்டாம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு பெற்றோர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பல தனியார்ப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குச் சான்றிதழ் தர பெருந்தொகைக் கேட்டு நச்சரிக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெற்றோர்களின் அபயக்குரல் வருத்தமளிக்கிறது. ஆகவே அப்பள்ளிகள் சான்றிதழை அளித்து மாணவர்களுக்கு உதவிடும்படி முதல்வர் அவர்களைத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.