சென்னை:

மிழகத்தின் பல ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டும் பலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக டிஜிபியாக தற்போது பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில்,  புதிய டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும்  13 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 13 பேரை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், தமிழக   சைபர் கிரைம் பிரிவுக்கு முதல் முறையாக கூடுதல் டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், காவல் செயல்பாடுகள் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகப் பிரிவு ஐஜியான வெங்கடராமனுக்கு, சைபர் கிரைம் பிரிவு, ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பெருகி வரும் இணைய குற்றங்களைத் தடுப்பதற்காக இந்தப் பிரிவுக்கு முதல் முறையாக ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.

நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி வினித் தேவ் வாங்கடே, மாநில குற்ற ஆவணங்கள் காப்பக பிரிவு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அந்தப் பிரிவின் டிஜிபியாக இருந்த கரண் சின்கா, பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

பயிற்சி பிரிவின் டிஜிபி குடவாலா, 30ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால், அந்தப் பிரிவுக்கு கரண் சின்கா மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர காவல் ஆணையரான சங்கர், சிபிசிஐடி ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய ஆணையராக ஐ.ஜி. பதவி உயர்வுடன் செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியக்குற்றப்பிரிவின் இணை ஆணையர் அன்பு, நிர்வாகப் பிரிவு ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உளவுப் பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே போலீஸ் டிஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு போக்குவரத்து இணை ஆணையர் சுதாகர் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ஜெய கவுரி சென்னை வடக்கு போக்குவத்து இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய உளவுப் பிரிவு துணை இயக்குநர் கண்ணனை மீண்டும் தமிழகத்திற்கு மாற்றியுள்ள அரசு, மாநில உளவுப்பிரிவு டிஐஜியாக நியமித்துள்ளது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.