திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. தற்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியிலுள்ள மருத்துவமனைகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதேபோல், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துவருகின்றனர்..

இந்தநிலையில், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம், கடந்த 1980-ம் ஆண்டு நிறுவனத்தின் சொந்தத் தேவைக்காகவும், மருத்துவமனை தேவைக்காகவும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக பிளான்ட் நிறுவியது. 1999-ம் ஆண்டு வரை ஆக்ஸிஜன் தயாரித்து வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்த பிளான்ட் தொடர்ந்து செயல்படுவதற்கு இயந்திரங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஆகும் செலவைவிட வெளியில் வாங்குவது குறைவாக இருப்பதால், அந்த பிளான்ட் மூடப்பட்டது. இந்தநிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் பிளான்ட்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளர். மேலும், ஆக்சிசன் உற்பத்தி செய்து தருவதாக பெல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.