டில்லி

த்திய அரசு ஒரு புறம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் இந்தியை திணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.  இதில் அளிக்கப்பட்ட கோப்புக்கள் இந்தியில் இருந்துள்ளன.  இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இதை தெரிவித்த திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவா, “கொரோனா தொடர்பாக இரண்டு அவைகளின் கட்சி குழு தலைவர்களை அழைத்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் விளக்கம் கொடுத்தார்கள். அந்த கூட்டத்தில் இந்தி மொழியில் மட்டுமே உள்ள ஒரு கோப்பு கொடுக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலமும் இந்தியும் ஆட்சி மொழியாக உள்ள போது இது ஏன்? ஆங்கிலத்தையும் அகற்றும் முயற்சியா?  ஏன் இந்தியில் மட்டும் விவரங்கள் இடம் பெற்று இருந்தது எனக் கேள்வி எழுப்பினேன்.

இதைச் சரிசெய்வதாகத் துணை குடியரசுத் தலைவர் உறுதி அளித்து உள்ளார். மத்திய அரசு ஒரு பக்கம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என செயல்படுகிறது. இந்திய ஆட்சி மொழியில் உள்ள ஆங்கிலத்தையும் அழிக்கக் கூடிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.