மானிட்டரில் தான் குழந்தையை பார்த்ததாகவும், இன்று இரவுக்குள் சுர்ஜித் மீட்கப்படுவான் என்று நம்புவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் மீட்பு பணிகள் குறித்து பார்வையிட வந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து நிலை குறித்து கேட்டறிந்ததோடு, சிறுவனின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, “ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், மொத்த நாடுமே அக்குழந்தைக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறது. ஒரு துளையின் மூலம் சிறுவனை மீட்கும் முயற்சி நடக்கிறது. தற்போது நடக்கும் பணியை பார்க்கும்போது இரவுக்கு சுர்ஜித் மீட்கப்படுவான் என்று தெரிகிறது.

அவனின் பெற்றோரை பார்த்தோம். அவர்களின் வேதனையை சொல்ல வார்த்தை இல்லை. தற்போது இயந்திரம் மூலம் போராடி வருகிறோம். இன்று இரவுக்குள் குழந்தை மீட்கப்படும் என்று தெரிகிறது. இது போன்ற நிகழ்வு இனி நடக்க கூடாது என்பதற்கு முன்ஜாக்கிரதை தேவை என்பதை விட, இப்போது சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்பதே ஒரே நோக்கம்.

தைரியமாக இருங்கள், நாடே உங்களுக்கு துணையாக இருக்கிறது என்றேன். துவண்டு போய் இருக்கிறார்கள். வலிகளை தாங்க இயலவில்லை. குழந்தையை கேமரா காட்சி மூலமாக மானிட்டரில் பார்த்தேன். நம்பிக்கை இருக்கிறது. அந்த குழந்தை உலகை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் கொடுத்து வருகிறார்கள். நம்பிக்கை தான் வாழ்க்கையின் பிடிமானம். நம்பிக்கையோடு காத்திருப்போம்” என்று தெரிவித்தார்.