திருச்சி
பொதுமக்களிடம் சரியாக நடந்துக் கொள்ளாத 80 காவல்துறையினர் மீது திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருச்சி சரக டிஐஜி ஆகப் பணி புரியும் பாலகிருஷ்ணன் பொது மக்களுக்குப் பல சேவைகள் செய்து வருகிறார். கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டு இவர் நடவடிக்கைகள் எடுத்துள்ளதற்கு சர்வதேச அமைப்பான ஓர்ல்ட் ஹுமானிடேரியன் டிரைவ் இவரைக் கவுரவித்துள்ளது.
பாலகிருஷ்ணன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி காவல்துறை சரகத்தில் பொதுமக்களிடம் சரியாக நடந்துக் கொள்ளாத 80 காவல்துறையினரை நீக்கி உள்ளோம். அவர்களின் பணி விவரங்களின்படி பொதுமக்களிடம் சுமுக நடைமுறை காணப்படவில்லை.
பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள எந்தப் பணியிலும் இனி அவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அறிவாற்றல் நடத்தை பயிற்சிகளை முடித்து மக்களிடம் தங்கள் அணுகுமுறையை மேம்படுத்திய பிறகு மட்டுமே வழக்கமான பணிகளில் அமர்த்தப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணத்துக்குப் பிறகு காவல்துறையினர் நடந்துக் கொள்வது குறித்து மக்கள் எதிர்மறை கருத்துக்களைத் தெரிவிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.
[youtube-feed feed=1]