சென்னை: திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்  வைக்கப்படும் என மானிய கோரிக்கை விவாதத்தின்போது,  பேரவையில் முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்தார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அவை மீண்டும் கூடியது. காலையில் வழக்கமான நடைமுறைகளுடன் கேள்வி நேரம் தொடங்கியது அப்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து,   கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி  நடைபெற்று வருகிறது.

இதன்மீது உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அப்போது உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.  உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து எஎதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட சில  உறுப்பினர்களின் கேள்விக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அப்போது, இந்த திட்டத்தின்படி,  ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் 10 கோரிக்கைகளை வழங்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதே நோக்கம் என்று கூறியதுடன், இந்த திட்டம் கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை சார்ந்த நான்கு ஆண்டுகள் சாதனை தொடர்பான புத்தகத்தில், ஏற்கனவே இந்த அவையில் அறிக்கப்பட்டவாறு திருச்சியில் ரூ.290 கோடி செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.

திமுக அரசை பொறுத்தவரை கலைஞரால் தொடங்கப்பட்ட கோட்டூர்புரம் நூலகத்திற்கு அண்ணா பெயரை வைத்தார். மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது. இதுவரை 16 லட்சம் பொதுமக்களும் மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த நவம்பர் மாதம் புதிய நூலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் கடந்த மாதம் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினேன். அந்த பணிகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்.

தமிழகத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை தொடங்கி மதிய உணவை அளித்து லட்சக்கணக்கான குடும்பங்களின் கல்வி கண்களை திறந்து தமிழ்நாட்டின் கல்வி புரட்சிக்கு வித்திட்ட காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். இதற்கான அரசாணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக வெளியிட வேண்டும் என்று முதல்வர் என்ற முறையில் நான் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு கூறினார்.