பெங்களூரு:

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, திருவாரூர் வாக்கி டாக்கி முருகன் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தமிழகம் கொண்டு வந்து விசாரிக்க திருச்சி காவல்துறை முடிவு செய்துள்ளது.


திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதியன்று கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் கொள்ளையில் திருவாரூர் முருகனின் மாஸ்டர் பிளான் இருப்பதை போலீஸார் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை, கொள்ளையடிக்கப்பட்ட சுமார்  4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில், இந்த கொள்ளை கும்பலுக்கு பல்வேறு கொள்ளைகளில் சம்பந்தம் இருப்ப தும், இந்த கொள்ளைச்சம்பவங்களுக்கு  திருவாரூர் முருகன் தான் மூளையாக இருப்பதும், போன் உபயோகப்படுத்தா மல், வாக்கி டாக்கி மூலம் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளையடித்து வருவதும் தெரியவந்தது.

இந்த கொள்ளை வழக்கின்  முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை போலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில்,சுரேஷ் நேற்று திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று பெங்களூரு நீதிமன்றத் தில் முருகன் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வரும், திருச்சி தனிப்படை போலிஸார்,  நீதிமன்ற அனுமதி பெற்று முருகனை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

திருவாரூரைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவர் முருகன், சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது விசாணையில் தெரிய வந்துள்ளது.