திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம்
ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான்.
இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
பஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம்:
உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார்.
பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார்.
நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உ<ள்ளடக்கி இங்கே <உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது.
திருவிழா:
சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு.
ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
பிரார்த்தனை:
கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்