சென்னை:  திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் துணை ஆட்சியராக பணிபுரியும் சரவணக்குமார் ரூ.40 லட்சம் லஞ்சப்பணத்துடன் சென்னை சென்றபோது விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த நிலையில், இன்று திருச்சி துணை ஆட்சியர் ரூ.40 லட்சம் லஞ்சப்பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியராக பணிபுரிபவர் சரவணக்குமார். இவர் ரூ.40 லட்சம் லஞ்சப்பணத்துடன் சென்னை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். இதுகுறித்து மர்ம நபர் லஞ்சஒழிப்பு காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், அவரது காரை விழுப்புரத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன்  தலைமையிலான குழுவினர் மடக்கினர்.

அந்த சொகுசு காரில் துணைஆட்சியர் சரவணக்குமார் உடன் அவரது உதவியாளரும் இருந்துள்ளார். அவரது காரை சோதனையிட்ட  விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காரினுள் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக மொத்தம்  ரூ.40 லட்சம் பணம் இருந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்களால் பதில் கூற முடியாத நிலையில், அது லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து துணைஆட்சியர் சரவணக்குமார் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த லஞ்சம் பணம் யாருக்கு எடுத்துச்செல்லப்பட்டது, எதற்காக எடுத்துச்செல்லப்பட்டது என்பது குறித்து காவல்துறை யினர் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

இந்த தகவலை அறிந்த செய்தியாளர்களை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்களிடம் பதில்கூற மறுத்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பின்னரே முழு விபரம் வெளியிடப்படும் என  தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக என்.கயல்விழி செல்வராஜ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட  ரூ.35 லட்சம் லஞ்சப் பணம் எழிலகத்தில் பறிமுதல்