கொச்சின்: கேரளாவின் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இம்மாவட்டத்தின் ஆரட்டுபுழா கோயிலில் திருச்சூர் பூரம் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும். இந்த திருவிழாவின்போது திருச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோயில் யானைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இந்தாண்டு, மே மாதம் 3ம் தேதி நடைபெறவிருந்த திருவிழா, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் சாதாரண பூஜைகள் மட்டும் செய்ய தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1962ம் ஆண்டு இந்தியா – சீனா இடையிலான போரின்போது, திருச்சூர் பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, 58 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரத்து செய்யப்பட்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.