உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்படுகிறது.
இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் மட்டுமல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் அரங்கிலும் இம்முறை நடைபெற்றது.
இதில் க்ளோயி ஸாவோ இயக்கிய ’நோமேட்லேண்ட்’ சிறந்த திரைப்படமாகவும், ஸாவோ சிறந்த இயக்குநராகவும் வெற்றி பெற்றனர். சிறந்த இயக்குநர் என்கிற ஆஸ்கரை வெல்லும் இரண்டாவது பெண் ஸாவோ என்பது குறிப்பிடத்தக்கது.
விழா நிகழ்வில், சமீபத்தில் மரணமடைந்த முக்கியமான திரைத்துறை பிரபலங்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த வகையில், கடந்த வருடம் புற்றுநோயால் காலமான இந்திய நடிகர் இர்பான் கானுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோல் இந்திய ஆடை வடிவமைப்பாளரான பாணு அதயாவிற்கும் ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த பட்டியலில் ரிஷி கபூர் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லை, சமூக ஊடகங்களில் அவர்களது ரசிகர்கள் அவர்கள் இல்லாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், அகாடமி விருதுகளின் இணையதளத்தில் ஒரு சிறப்பு இன் மெமோரியம் பிரிவில் அவை நினைவு கூறப்பட்டன.