கோவை:
கோவை ஈஎஸ்ஐ மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் அதிகாரப்பூர்வமான அரசு மருத்துவர்கள் வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையிலும் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா அறிகுறி காணப்பட்டவர்கள், அங்குள்ள ஈஸ்ஐ மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு ஈஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றிவரும் முதுநிலை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையில்,கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 2 முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள மருத்துவர்கள், தங்களுக்கு தேவையான முகக்கவசம் உள்பட பாதுகாப்பு உபகரணங்கள் அரசால் வழங்கப்படவில்லை என்றும், நோயாளிகளக்கு தேவையான மருந்துகள் இல்லை குற்றம் சாட்டியதாகவும், அது தொடர்பான தகவல்களை, வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட 2 மருத்துவர்களும், உடனடியாக அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து உயர் அதிகாரிகளால் நீக்கப்பட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்த மருத்துவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோயிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசம் போன்றவை தரப்படுவதில்லை என்று அரசு மீது குற்றம் சாட்டிய தால், அவர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசின் அலட்சியம் மற்றும் அரசு மக்களிடையே பரப்பி வரும் பொய்யை, அம்பலப்படுத்திய தால், அவர்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சக மருத்துவர்கள் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர்.