சென்னை

கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஆடிபவுர்ணமி தினத்தையொட்டி திருவண்ணாமலைக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவண்ணாமலைக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பிற ஊர்களுக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.  குறிப்பாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ஜெயங்கொண்டான், பண்ருட்டி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதியடைந்தனர்.

சொந்த ஊர் செல்ல போதிய அரசு பேருந்துகள் இல்லை என்று குற்றம்சாட்டிய பயணிகள், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி முதல் பேருந்துக்காக குழந்தைகளுடன் காத்திருப்பதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர். காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பயணிகள் சமாதானம் அடைந்துள்ளனர்.