அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியர்கள் சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் சவூதி அரேபியா, துபாயில் சிக்கிக்கொண்டு வெளிநாட்டினர், இந்தியர்கள் பலர் நாடு திரும்பினார்.

இதையடுத்து, கடந்த வாரம் வரை சவூதி மற்றும் குவைத் செல்பவர்கள் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் அங்கு சென்றனர். இந் நிலையில் தற்போது சவுதி அரேபிய அரசு திடீரென 20  நாடுகளுக்கு செல்லவும், அங்கிருந்து வரவும் தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டது.

ஆகையால் தனிமைப்படுத்தப்பட்ட வெளி நாட்டினர் மற்றும் இந்தியர்கள் தற்போது சவுதி மற்றும் குவைத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அமீரக நாடுகளில் சிக்கி உள்ளவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.