சென்னை,
நேற்று மாலை முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி போக்குவரட்த்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை உயர்த்த வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இதையடுத்து தனியார் பேருந்துகளையும், டிரைவர்களையும் அழைத்து அவர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத்தின் சார்பாக வழக்கறிஞர் வாராகி என்பவர், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம். ஏற்கெனவே ஆம்புலன்ஸ் டிரைவர்கள், செவிலியர்கள் போராட்டத்தின்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
உயர்நிதி மன்றம் உத்தரவு காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.