சண்டிகர்:
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதை மீறுவோருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கும் நடைமுறையை மாநகராட்சி அமல்படுத்தி வருகிறது.
அதோடு விழிப்புணர்வு பணிக்கு என்று 5 திருநங்கைகளை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. இவர்கள் காலை நேரங்களில் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் பெண்களிடம் சென்று ரோஜாப்பூ கொடுத்து கைத்தட்டி வாழ்த்து பாடல் பாடுகின்றனர்.
இந்நிலையில் மன்சா தேடி காம்ப்ளக்ஸ் என்ற குடிசை பகுதியை சேர்ந்த 29 வயது பாப்பு என்ற பெண் இன்று காலை திறந்த வெளி கழிப்பிடம் சென்றபோது திருநங்கைகள் ரோஜாப்பூ கொடுத்து கைத்தட்டி பாடியுள்ளனர். பாப்பு மட்டுமல்ல இது போல் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தர்ம சங்கடத்தையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் நடந்துள்ளனர்.
திருநங்கைகளுடன் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் ஜோக்பாலும் உடன் சென்று வருகிறார். திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோருக்கு ரூ. 500 அபராதம் விதிக்க வேண்டும். அதற்கு பதிலாக இவ்வாறு வாழ்த்து பாடல் பாடி ரோஜா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு தினமும் தலா ரூ. 500 சம்பளம் வழங்கப்படுகிறது. சில இடங்களில் இவ்வாறு வாழ்த்து பாடல் பாடிய திருநங்கைகளை மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளது.