சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெற்று வரும் நிலையில், ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, திருநங்கை அப்சரா அதிமுக அலுவலகத்தில் விருப்பமனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக சாரபில் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல், மார்ச் மாதம் 5 ஆம் தேதி வரை விருப்பமனு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஏராளமானோர், தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருநங்கை அப்சரா அதிமுக தலைமை கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் விருப்ப மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், திருநங்கைகளுக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்கள், உதவிகளைச் செய்து கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. திருநங்கைகள் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சமவாய்ப்பு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் உள்பட அனைத்து துறையினருக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சியின் திட்டங்களைச் சுருக்கமாக எடுத்துக் கூறி கொளத்தூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். கொளத்தூர் தொகுதியில் இனிமேல் ஸ்டாலின் தலை தூக்க முடியாத அளவில் தோற்கடிப்பேன்” எனத் தெரிவித்தார்.