உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ பதிவில் டி.ஆர் கூறியிருப்பதாவது:
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள். மக்கள் நலனைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்கு ஒரு சின்ன தூண்டுகோல். பொங்கல் விடுமுறைக்குத் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதித்து தமிழக அரசு கொடுத்தது அறிக்கை. ஆனால், துரதிருஷ்டவசமாக 50%தான் அனுமதிக்க வேண்டும் என்று விதித்துவிட்டது மத்திய அரசு தணிக்கை.
மத்திய அரசு 50%தான் இருக்கைகள் அனுமதிக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்படியென்றால், நாங்கள் ஏன் முழுமையாக 12% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். திரையரங்குகள் நிறைய டிக்கெட் கொடுக்கக் கூடாது. ஆனால், ஜிஎஸ்டி மட்டும் முழுமையாகச் செலுத்த வேண்டும். என்னங்க இது கொடுமை.
தமிழகத்தில் ஒரு சில ஊர்களில் மட்டுமே கடற்கரை இருக்கிறது. அந்தக் கரையை விட்டால் மக்களுக்கு இருக்கும் இன்னொரு பொழுதுபோக்கு சினிமா. மக்களுக்குப் பொழுதுபோக்கிற்கு வேறு என்ன வழி இருக்கிறது. ஒரு சினிமா டிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அவர்கள்தான் கட்ட வேண்டும் வரி. அவர்கள் தலையில் ஏற்றிக் கொண்டே இருக்கிறீர்கள் வரி. ஆகையால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும். எங்கள் கலையுலகினரின் கஷ்டத்தைப் போக்க வேண்டும். மக்களின் உணர்வைக் கட்டிக் காக்க வேண்டும்”.
இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.