சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்படும் என்றும், இந்த பாடத்திட்டம், வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் நீட் போன்ற மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை தொடங்கி உள்ள தமிழக அரசு, தற்போது பள்ளி மாணவர்களின் மன அழுத்ததை போக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டம் குறித்து விவரித்தார். அப்போது, புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இ-க்கு மேலாகவும் நாடே வியக்கும் வகையில் இருக்கும் எனவும், இந்த பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியாகும் என்றும், அதன்பிறகு தமிழத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் என கூறினார்.
மேலும், பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
பள்ளிகளில் தூய்மை பணி மேற்கொள்ள 100 நாள் வேலைதிட்ட பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வெயிட்டேஜ் முறையால் பணியை இழந்தவர்களுக்காக குழு அமைக்கப்பட்டு பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.