சென்னை: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதன்படி வரும் (பிப்.20) 20ந்தேதி தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இல்லம்தேடி கல்வி திட்டத்தின் சிறப்புபணி அலுவலர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக, பள்ளிக்கல்வி துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இவை தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தில் பணியாற்றும் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு கடந்த டிசம்பரில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தன்னார் ‘வலர்களுக்கு வரும் பிப்.20-ம் தேதி குறுமைய அளவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை, வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி பயிற்சியை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். அன்றைய தினம் பயிற்சியில் கலந்து கொள்ளாத தன்னார்வலர்களுக்கு பிப்.25-ம் தேதி பயிற்சி அளிக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கான நிதி, மாவட்ட வாரியாக கணக்கிட்டு விடுவிக்கப்படுகிறது. எனவே, பயிற்சியை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது