சென்னை:
சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை போட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் ரெயில்வே போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.
சேலத்தில் இருந்து கடந்த 8ம் தேதி இரவு சென்னை எழும்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பழைய, கிழிந்த ரூபாய்த்தாள்கள் சுமார் 342 கோடி ரூபாய் சென்னை ரிசர்வ வங்கிக்காக கொண்டு வரப்பட்டது. ரெயிலில் பாதுகாப்பிற்காக சேலம் ஆயுதப்படை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் 8 போலீசார் வந்தனர்.
ரெயில் சென்னை எழும்பூர் வந்ததும், தனியாக கழற்றப்பட்ட பெட்டி, சரக்குகள் ஏற்றி இறக்கும் இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
பணம் எடுக்க வந்த சென்னை ரிசர்வ் வங்கி உதவி மேலாளர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ரெயில் பெட்டியை திறந்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையை தொடங்கினர்.
ரெயில் பெட்டியினுள் நுழைய வசதியாக கூரையில் வெட்டி எடுக்கப்பட்ட தகடு வழியில் எங்காவது விழுந்திருக்கிறதா என்று ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடத்தொடங்கினர். ஆனால் கொள்ளையர்கள் வெட்டியெடுத்த பகுதி, பணம் கொண்டுவரப்பட்ட பெட்டியிலேயே இருந்துள்ளது.
பின்னர் அதனை சென்னை கடற்கரை சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் கூரை எப்படி வெட்டியெடுக்கப்பட்டது என்று ஆய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறை யான ரயில்வே போலீசாரே வழக்குப் பதிவு செய்து விசாரிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென களமிறங்கிய ரயில்வே பாதுகாப்பு படை நாங்கள்தான் வழக்கு பதிவு செய்வோம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தது. நேற்றிரவு இந்த வழக்கு ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது. ஐஜி ராம சுப்பிரமணி, எஸ்பிக்கள் விஜயகுமார், ஆணி விஜயா ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற விசாரணையில், கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து கூட தடயங்கள் சிக்கவில்லை. இந்த தடயங்கள் கிடைத்த பிறகுதான், கொள்ளையர்கள் யார் என்ற அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் இந்த வழக்கை நேற்றிரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி சிவனுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ரயில் கொள்ளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது.
பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து பேசிய ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி பகத், கொள்ளை எங்கே எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
ரெயில்வே பாதுகாப்பு படை, போலீசார் இணைந்தே விசாரணை நடத்தி வருகிறோம். ரெயில் கடந்து சென்ற தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. .விசாரணையை பொருத்தவரையில் ரெயில்வே பாதுகாப்பு படையின் விசாரணை ஒரு எல்லை வரை தான் முடியும். இதில் மாநில போலீசாரின் பங்கு மிக முக்கியம். இதுவரை கிடைத்த தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே இதுபோல் ஒரு கொள்ளை சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறப்படுகிறது. தமிழக போலீசாருக்கு சவாலான இந்த கொள்ளை சம்பவம் பற்றி விசாரணை முடிவை சீக்கிரமே இந்திய மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.