டெல்லி: மக்கள் பயணத்தை தவிர்க்கவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சகம் அப்பாடக்கர் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், சமையல் எரிவாயு உள்பட பெட்ரோலிய பொருட்கள் விலைகள் உயர்ந்துள்ளதே அதற்கு என்ன காரணம்..? என சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சிக்கப்படுகிறது. கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் சமைக்காமல் சாக வேண்டும் என மோடி அரசு விரும்புகிறதா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நடவடிக்கையாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் மத்தியஅரசு பொதுமுடக்கம் அறிவித்தது. அதன் காரணமாக அனைத்து போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டன. பின்னர், தொற்று பரவல் குறைவைத் தொடர்ந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்த படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் சுமார் 60 சதவிகிதம் அளவிலான ரயில்களே முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையான ரயில்போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு பயணிக்கவே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை, கோவிட் இன்னும் சில மாநிலங்களில் மீண்டும் பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பிற பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுதலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் மற்றும் பயணத்தை குறைக்க ஊக்கப்படுத்துகிறார்கள். அதனால், ரயில்களில் கூட்டம் வருவதைத் தடுக்கவும், கோவிட் பரவுவதைத் தடுக்கவும் ரயில்வேயின் செயலூக்கமான நடவடிக்கையாக, பயணிகள் கட்டணம் கொஞ்சம் அதிக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முடிந்த அளவுக்கு பயணங்களை தவிர்க்கும் வகையிலேயே, கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று ரயில்வே அமைச்சகம் சிலிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளது.
ரயில்வேயின் விளக்கத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளதே. அப்போ, பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதை தடுக்கவே விலை உயர்ந்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பியிருப்பதுடன், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளதே, அது, பொதுமக்கள் உணவு சமைக்காமல் பட்டினியாக கிடந்து சாகவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஏராளமானோர் இன்னும் தங்களது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் விலை உயர்வுக்கு, காரணமாக மத்தியஅரசு கூறிய அப்பா டக்கர் விளக்கம் பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.