சம்பல்பூர், ஒடிசா
மாடு குறுக்கே வந்ததால் ஒடிசாவில் ஒரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஒடிசா மாநிலத்தில் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மாடு தண்டவாளத்தின் குறுக்கே வந்ததால் மாடு மீது மோதிய வேகத்தில் ரயில் தடம்புரண்டது.
எனவே தண்டவாளத்தை விட்டு, ரயிலின் சக்கரம் சில அடிகள் கீழே இறங்கியது. குறிப்பாக என்ஜினில் இருந்து நான்காவது பெட்டியின் சக்கரங்கள் கீழே இறங்கின. ஓட்டுநர் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் ரயில் கவிழாமல் தப்பியுள்ளது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விபத்து பற்றி தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக மருத்துவ உபகரணங்களுடன் மறுசீரமைப்புக்கான நிவாரணப் பொருட்களைக் கொண்ட விபத்து நிவாரண ரயில் அந்த இடத்தை அடைந்து ரயில் சக்கரம் மற்றும் தடம்புரண்ட தண்டவாளம் ஆகியவை சீரமைக்கப்பட்டன. சுமார், 2 மணி நேரத்திற்குப் பிறகு, ரயில், 30 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டு இயக்கத்தைத் தொடங்கியது.