டில்லி

மொபைல் சேவைகளை விரைவில் மாற்ற வேண்டும் என்னும் விதிகளை பின்பற்ற மொபைல் சேவை நிறுவனங்களுக்கு டிராய் அளித்த கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பு மொபைல் உபயோகிப்போர் சேவை நிறுவனங்களை மாற்றும் போது புதிய எண்கள் வழங்கப்பட்டன,   இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிரமம் உண்டானது.   அதை ஒட்டி மொபைல் நம்பரை மாற்றாமலே சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டது.  இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.   ஆயினும் அவ்வாறு மாற்ற நிறுவனங்கள் அதிக காலம் எடுத்துக் கொண்டன.

அதனால் டிராய் கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் புதிய விதிகளை அறிவித்தது .   அதன்படி மொபைல் சேவை நிறுவனங்கள் இவ்வாறு மாற்ற அதிகபட்சமாக இரு தினங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வெளியூர் மொபைல் எண்களுக்கு அதிக பட்சம் நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.   இந்த விதிகளை பின்பற்ற ஜூன் 13 வரை கெடு விதிக்கபட்டிருந்தது.

ஆனால் மொபைல் சேவை நிறுவனங்கள் நெட் ஒர்க் மற்றும் தொலை தொடர்பு விவகாரங்களால் அவ்வாறு மாற்ற முடியாது என மேலும் அவகாசம் கோரின.  அதை ஒட்டி டிராய் நிறுவனம் இந்த அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.

தற்போது மொபைல் சேவை நிறுவனங்கள் இந்த மாற்றத்துக்கு சுமார் 7 நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் உலக அளவில் பல நாடுகளில் இந்த மாற்றம் ஒரு சில மணி நேரங்களில் முடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.