மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரர் நவீன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட விளாங்குடியை சேர்ந்த நவீன் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைகையொட்டி, ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உலகப்புகர்பெற்ற  முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜனவரி 14ந்தேதி பொங்கலன்று காலை காலை 6.30 மணிக்கு போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்.  அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால், அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டர் வாகனமும் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு நிசான் காரும் பரிசு அளிக்கப்படும் என  தமிழ்நாடு அறிவித்துள்ள நிலையில், போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், குக்கர், கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், நேற்றைய போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. . இந்த போட்டியில் இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநகர காவல்துறை விதித்துள்ளது.

அதன்பின்னர் தொடங்கிய முதல் சுற்று போட்டியின் முடிவில் 73 மாடுகள் களம் கண்டன. 11 மாடுகள் பிடிபட்டன. தலா இரு மாடுகள் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (மஞ்சள் நிற உடை எண் 38), கரடிக்கல்லைச் சேர்ந்த சுஜித்குமார் (மஞ்சள் நிற உடை எண் 16) ஆகிய இருவர் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதாக போட்டிக் குழு அறிவித்தது.

இரண்டாவது சுற்றில், 82 மாடுகள் களம் கண்டன. 22 மாடுகள் பிடிபட்டன. ஆறு பேர் இந்த சுற்றில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் மூன்று காளைகளைப் பிடித்த சமயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (சிவப்பு நிற உடை எண் 75), இரண்டு காளைகளைப் பிடித்த விக்னேஷ் (சிவப்பு நிற உடை எண் 88), இரண்டு காளைகளைப் பிடித்த இன்பசேகரன் (சிவப்பு நிற உடை எண் 86), இரண்டு காளைகளை அடக்கிய வாடிப்பட்டியைச் சேர்ந்த பிரஷாந்த் (சிவப்பு நிற உடை எண் 69), புதுக்கோட்டை வல்லரசு (சிவப்பு நிற உடை எண் 76), தேனூர் அஜய் (சிவப்பு நிற உடை எண் 82) ஆகியோர் ஆவர்.

இதனையடுத்து, நான்கு சுற்றுகள் என மொத்தம் ஆறு சுற்றுகள் காலை முதல் பகல் நேரம் வரை நடந்தது. இதில் தஞ்சாவூர் வெள்ளக்கல் இளையராணியின் காளை வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தியிடம் காளை உரிமையாளர் இளையராணி பரிசு பெற்றார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வியின் காளை வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், போட்டிகள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், நாளை நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு, நாளை மறுநாள் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகியவை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும், கடைசி நாள் போட்டியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார்.

அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த நவீன் கலந்து கொண்டிருந்தார். களத்தில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று நவீனின் மார்பில் முட்டியது. இதில் பலத்த காயமடைந்த நவீனை, ரத்தக் காயங்களுடன் அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நவீனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடுபிடி வீரர் நவீன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், அவனியாபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு தடுப்புகள் இடிந்ததில் சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர்கள் இருவர் உட்பட மூன்று பேர் காயம் அடைந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் இறுதி சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இறுதிச் சுற்றுப் போட்டியில், ஏற்கெனவே வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள 30 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.