வாணியம்பாடி: தனியார் நிறுவனம் அறிவித்த இலவச சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம் வாணியம்பாடியில் அரங்கேறி உள்ளது.

நாளை தைப்பூசம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி – சேலை வழங்குவது வழக்கம்.  அதன்படி, இந்த ஆண்டு தைப்பூசம்  நாளை (ஞாயிற்றுக்கிழமை)  கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இனறு  இலவச வேட்டி – சேலைக்கான டோக்கன் தருவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சேலைக்கான டோக்கர் பெற தனியார் நிறுவனம் முன்பு ஏராளமான பெண்களும், வயதான முதியவர்களும் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்ட டோக்கன் பெற முண்டியடித்ததில், முன்னால் நின்றுகொண்டிருந்த வயதான மூதாட்டிகள் கீழே விழ, அவர்கள் மீது பெண்கள் ஏறி மிதித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பெண்களை அங்கிருந்த வெளியேற்றி, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண்களின் உடல்களை மீட்பு அடையாளம் காணும் பணியை தொடங்கியுள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.