மதுரை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில்,  மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில்  வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையன் குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அம்மா பிள்ளை (வயது 65). இவரது பேரன் வீரமணி (வயது 10) மற்றும் பக்கத்துவீட்டு பெண் வெங்கட்டி (வயது55) . இவர்கள் நேற்று இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது,   இரவு ஏழு மணி அளவில் வீடு வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதபோது,  திடீரென வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மேல் விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி,  வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.  இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம்  வலையன் குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கட்டி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணி மற்றும் அம்மா பிள்ளை ஆகிய இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களும் சிகிச்சை பலன்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இநத் சம்பவம் அந்த பகுதியில் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.