சென்னை: வடசென்னையின் முக்கிய பகுதியான சென்னை மணலி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயண ஆலையில் இன்று திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணலியை சுற்றி சிபிசிஎல் உள்பட ஏராளமான ரசயாண ஆலையகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து வெளியேறும் புகை மற்றும் மாறுக்களால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், ரசாயண ஆலைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மணலியில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு ஆலையில் விஷ வாயு தாக்கி கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். இன்று காலை, மணலியில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் லிமிட்டெட் தொழிற்சாலையில் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென விஷ வாயு தாக்கியது. அப்போது தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த இருவர் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.
இதை கண்டதும், மற்றவர்கள் உடனே அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து உடற்கூறாய்வுக்காக இருவரது உடல்களும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்துதான் விஷவாயு கசிந்ததா அல்லது ஆலையில் இருந்து கசிந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.