க்னோ

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதங்களை உத்திரப் பிரதேச அரசு அதிகரித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை ஒட்டி அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டம் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் சர்மா மற்றும் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை இரு மடங்கு ஆக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகனம் வைத்திருந்தோர் அந்த வாகனம் உபயோகத்தில் இல்லை என்றால் அதே எண்ணை மீண்டும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட் இல்லாமல் செல்வோருக்கான அபராதம் ரூ.300 லிருந்து ரூ.600 ஆக்கப்பட்டுள்ளது.  ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் செலுத்துவோருக்கான அபராத தொகை ரூ.500 லிருந்து ரூ. 1000 ஆக்கப்பட்டுள்ளது. வாகனம் செலுத்தும் போது மொபைலில் பேசிக் கொண்டே செல்வோருக்கான அபராத தொகை ரூ.500 லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதோருக்கு முதல் முறை ரூ. 500 ம் அதற்கு பிறகு ஒவ்வொரு முறைக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.    இரு சக்கர வாகனங்களில் மூவர் சென்றால் முதல் முறை ரூ.300 அபராதமும் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ரூ.500ம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் செல்வோருக்கான அபராதம் முதல் முறை ரூ,300 ஆகவும் அடுத்தடுத்த முறை ரூ.500 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு குறிப்பிட்ட பதிவு எண் தேவை என கோரிக்கை விடுப்போருக்கான கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, நான்கு சக்கர வாகனங்களுக்கு மிக மிக முக்கியமான பதிவு எண்களுக்கு ரூ.1 லட்சம், மிக முக்கிய எண்களுக்கு ரூ. 50,000, கவர்ச்சியான எண்களுக்கு ரூ 25,000 மற்றும் முக்கிய எண்களுக்கு ரூ. 15,000 என கட்டணம் விதிக்கப்பட உள்ளது இரு சக்கர வாகனங்களுக்கு அதைப்போல் முறையே ரூ, 20,000, ரூ.10,000, ரூ.5000 மற்றும் ரூ.3000 என கட்டணம் விதிக்கப்பட உள்ளது.