மும்பை

டந்த 1994 ஆம் வருடம் பிரபஞ்ச அழகி போட்டிக்கு செல்லும் போது பாஸ்போர்ட்டை தொலைத்ததாக சுஷ்மிதா சென் கூறி உள்ளார்.

கடந்த 1994 ஆம் வருடம் இந்திய அழகி போட்டியில் சுஷ்மிதா சென் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அதில் சுஷ்மிதா சென் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் இரண்டாவதாக இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டிக்கு இந்திய அழகியான சுஷ்மிதா சென் அதே வருடம் அனுப்பப்பட்டார்.

இந்த பயணம் குறித்த சில தகவல்கள தற்போது சுஷ்மிதா சென் வெளியிட்டுளார். சுஷ்மிதா, “அப்போது அனுபமா சர்மா என்பவர் புகழ்பெற்ற மாடலாகவும் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் இருந்தார். வங்கதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்காக நான் அவரிடம் எனது பாஸ்போர்ட்டை கொடுத்திருந்தேன். ஆனால் அவர் அதை எங்கோ தொலைத்து விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அனுபமா தாம் என்ன செய்வதென்று தெரியவில்லை எனக் கூறி தனது பொறுப்பை தட்டி கழித்து விட்டார். மிகக் குறைந்த நாட்களே உள்ளதால் எனது தந்தை இது குறித்து ஏதாவது செய்ய முயன்றும் அவருக்கு பெரிய மனிதர்கள் நட்பு இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது விழாக் குழுவினர் எனக்கு பதிலாக ஐஸ்வர்யா ராயை பிரபஞ்ச அழகிப் போட்டிக்கும் என்னை உலக அழகிப் போட்டிக்கும் அனுப்புவதாக கூறினார்கள்.

எனக்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. போட்டியின் மூலம் முதல் இடத்துக்கு வந்தும் என்னுடைய வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு அளிப்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. நான் எனது தந்தையிடம் நிலைமையை கூறி அழுதேன். அத்துடன் நான் அந்த போட்டியில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் இந்தியாவில் இருந்து யாரும் கலந்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறினேன்.

எனது தந்தையின் நண்பரின் நண்பர் மூலம் மறைந்த மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டை அவர் சந்திக்க முடிந்தது. அவர் என்னுடைய பாஸ்போர்ட் விவரங்களை அளித்தார். நான் இந்திய நாட்டின் பிரதிநிதியாக போட்டியில் கலந்துக் கொள்ள உள்ள்தையும் எடுத்துக் கூறினார். அமைச்சர் உதவியால் எனக்கு மற்றொரு பாஸ்போர்ட் கிடைத்து நான் போட்டிக்கு சென்று வெற்றி பெற்றேன்.

இதனால் இப்போது எனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் எவ்வித தகராறும் இல்லை. அவர் உலக அழகியாகவும் நான் பிரபஞ்ச அழகியாகவும் வென்ற பிறகு இருவரும் இணைந்து பல பேட்டிகள் அளித்துள்ளோம்.  அந்த போட்டியின் சமயத்தில் நான் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருந்தது உண்மையாகும். ஆனால் அதன் பிறகு அந்த கோபம் நீடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.