சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல் நந்தனம் வரையில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி ஓரளவு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக செனடாப் ரோடு சந்திப்பு முதல் அறிவாலயம் வரை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையில் இருந்து ஜெமினி நோக்கி செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறமாக தியாகராய சாலையில் திரும்பி வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலையை அடைந்து பின் அண்ணாசாலை வழியாக ஜெமினி செல்லும் வகையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெங்கட்நாராயணா சாலை வழியாக அண்ணா சாலை செல்ல முடியாதவர்கள் போக் ரோடு வழியாக தியாகராய சாலை வழியாக அண்ணாசாலை சென்ற நிலையில் இப்போது அவர்கள் ம.பொ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலையில் சென்று அண்ணா சாலை செல்ல வேண்டும்.

அதேபோல் பனகல் பூங்காவில் இருந்து தியாகராய சாலையில் வருபவர்களும் ம.பொ.சி. சந்திப்பில் இடதுபுறம் வடக்கு போக் சாலை வழியாக விஜயராகவா சாலையில் சென்று அண்ணா சாலை செல்ல வேண்டும்.
இதனால் அனைத்து வாகனங்களுக்கும் வடக்கு போக் ரோடு மற்றும் விஜயராகவா சாலையில் திருப்பிவிடப்பட்டதால் அந்த சாலைகள் மற்றும் கிரியப்பா மற்றும் ராமன் தெருவிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை வழக்கமாக அவ்வழியாக வேலைக்குச் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திண்டாடினர்.
முத்துசாமி பாலம் முதல் கத்திபாரா சந்திப்பு வரையிலான மவுண்ட் ரோட்டில் உள்ள அனைத்து சந்திப்புகளிலும் வாகனங்கள் வலதுபுறம் திரும்ப முடியாத வகையில் இடதுபுறம் திரும்பி யூ-டர்ன் செய்ய வேண்டியுள்ளதால் அண்ணாசாலையைக் கடந்து சென்னையின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கிற்கும் கிழக்கில் இருந்து மேற்கும் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்தால் தி.நகர், ஜெமினி மற்றும் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.